நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைப்பு - விஜய் கட்சிக்கு புதிய வலுசேர்ப்பு

சென்னை: பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று நடிகர் விஜய் முன்னிலையில் தவெக அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இன்னும் எந்தத் தேர்தலையும் சந்திக்காத தவெக, வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக முக்கிய நபர்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
இதே வரிசையில், அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நாஞ்சில் சம்பத் இணைந்தது, அந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியாக ஒரு முக்கிய முன்னேற்றம் என பார்க்கப்படுகிறது.
நாஞ்சில் சம்பத் இதற்கு முன்பு திமுக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தவர். பின்னர் எந்தக் கட்சியிலும் இணையாமல், அரசியல் தொடர்பான ஊடக விவாதங்களில் பேசி வந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டங்களிலும் அவர் அடிக்கடி மேடைப்பேச்சாளராக கலந்து கொண்டார்.
மேலும், சில திரைப்படங்களிலும் நடித்தவர். குறிப்பாக, ஒரு இளம் நடிகரின் படத்தில் அவர் பேசிய “துப்புனா துடைச்சுக்குவேன்” என்ற வசனம் பரவலாக பிரபலமானது.
கடந்த சில மாதங்களாக தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை அவர் வெளிப்படையாக தெரிவித்த நிலையில், தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்துள்ளார்.